search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செத்து மிதக்கும் மீன்கள், விவசாயம் பாதிப்பு நாமக்கல் தூசூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து மனித சங்கிலி
    X

    செத்து மிதக்கும் மீன்கள், விவசாயம் பாதிப்பு நாமக்கல் தூசூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து மனித சங்கிலி

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிய ஏரி தூசூர் ஏரியாகும்.
    • சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிய ஏரி தூசூர் ஏரியாகும். இது நாமக்கல்-துறையூர் ரோட்டில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தூசூர் ஏரியின் மூலம் சுமார் 1000 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி நீர் மூலம் இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் மழை பெய்யும் போது அங்கிருந்து காட்டாற்றின் வழியாக வரும் வெள்ள நீர், காரவள்ளி, நடுக்கோம்பை, சின்னக் குளம், பெரியக் குளம், பழையபாளையம் உள்ளிட்ட 6 குளங்கள் முதலில் நிரம்பும். பின்னர் வழிந்தோடும் உபரி நீர் தூசூர் ஏரிக்கு வந்தடையும்.

    இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் பின்னர் ஆண்டாபுரம் வழியாக திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காவிரியில் சென்று கலக்கும். ஏரியில் ஒப்பந்த அடிப்படையில் மீன் வளர்ப்பும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, நாமக்கல் நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை வழியாக வந்து தூசூர் ஏரியில் கலக்கிறது.

    இதனால் ஏரி நீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏரி நீர் மட்டுமல்லாது இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்படுகிறது.

    தூசூர் ஏரியில் கழிவு நீர் ஏரியில் கலப்பதைக் கண்டித்தும், அதை தடை செய்யக்கோரியும், தூசூர் ஏரிக்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட உதவி செயலாளர் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

    Next Story
    ×