search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த  கனமழை
    X

    நெல்லை, தென்காசி, டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

    • தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பேட்டை, சமாதானபுரம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை பெய்தது.

    மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயினருவியில் இரவில் அதிக அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் இரவில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஓட்டப்பிடாரத்தில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 17 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடியில் பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி

    களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் அணைக்கரை தரைப்பாலம் மூழ்கியது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மூணாம்சேத்தி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரசேகர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பெய்த கனமழையால் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மாலையில் வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. பின்னர் இரவில் மழை பெய்யத் தொடங்கியது. திருச்சி மாநகரில் விடிய விடிய சாரல் மழை பெய்தது.

    தஞ்சை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இன்று காலையிலும் மழை இடைவிடாமல் பெய்தது.

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. நேற்று 105 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 113.16 அடியாக உயர்ந்துள்ளது.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவில், அப்துல்கலாம் மணி மண்டபம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாலையம், புதூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    சேலம் ஆத்தூர், நத்தக்கரை, சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வேருடன் சாய்ந்தது. புதுச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழைபெய்து வருகிறது.

    Next Story
    ×