search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் ஜங்சன்- ஓமலூர் இடையே புதிய அகல ரெயில் பாதை பணி தீவிரம்
    X

    சேலம் ஜங்சன்- ஓமலூர் இடையே புதிய அகல ரெயில் பாதை பணி தீவிரம்

    • சேலம்- மேட்டூர் அணை பாதையை இருவழித்தடமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
    • இப்பணியை 3 பகுதிகளாக பிரித்து கட்டுமானப்பிரிவு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டூரில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையத்திற்கு சரக்கு ரெயில்களில் நிலக்கரி லோடு மிக அதிக அளவு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த வழித்தடம் ஆரம்பத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தது. அதனை அகல ரெயில் பாதையாக மாற்றினர். ஆனால் மேட்டூர் அணைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில் சேலம்- மேட்டூர் அணை பாதையை இருவழித்தடமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

    இதன்படி சேலம்-மேட்டூர் அணை இருவழிப்பாதை திட்டத்திற்கு கடந்த 2012- ஆண்டு மத்திய அரசு ரூ.220 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, பணியை ரெயில்வே நிர்வாகம் ெதாடங்கியது. இப்பணியை 3 பகுதிகளாக பிரித்து கட்டுமானப்பிரிவு மேற்கொள்ளப்பட்டது. அதாவது மேட்டூர் அணை- மேச்சேரி ஒரு பகுதியாகவும், மேச்சேரி- ஓமலூர் ஒரு பகுதியாகவும், ஓமலூர்- சேலம் ஒரு பகுதியாகவும் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல் இரு கட்ட பணிகள் நிறைவடைந்து, அப்பாதையில் மின்வழித்தடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 3-ம் கட்ட பணியாக சேலம் - ஓமலூர் இடையே சுமார் 15 கிலோ மீட்டருக்கு புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை தற்போது ெரயில்வே கட்டுமானப்பிரிவு தீவிரப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேலம்- பெங்களூரு மார்க்கத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு, புதிதாக அகல ரெயில் பாதை தண்டவாளங்களை அமைக்க இடத்தை தயார்படுத்தினர்.

    தொடர்ந்து தற்போது சேலம் ஜங்சன் யார்டு பகுதியில் இருந்து ரெட்டிப்பட்டி, மேக்னசைட் வழியே புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இப்பணியை இன்னும் 6 மாத காலத்திற்குள் முடிக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது இணை தண்டவாள பாதையாக விளங்கும். இந்த பணியை விரைந்து முடித்து மின்வழித்தடத்தையும் ஏற்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×