search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை: சென்னை ஐ.ஐ.டி. 5-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்
    X

    தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை: சென்னை ஐ.ஐ.டி. 5-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்

    • அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 65-வது இடத்தையும் பிடித்துள்ளது.
    • இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன.

    சென்னை :

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை நேற்று காலை வெளியிட்டு உள்ளது.

    இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.

    அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனமும், டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனமும் இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 65-வது இடத்திலும், கோவை வேளாண் பல்கலைக்கழகம் 93-வது இடத்திலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 94-வது இடத்திலும் என தமிழ்நாட்டில் பங்கேற்ற கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

    ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை தொடர்ந்து 5-வது ஆண்டாக தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த தரவரிசையில் 22-வது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 25-வது இடத்திலும் இருந்தது. ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடத்தில் 7 ஐ.ஐ.டி.க்கள் இடம் பெற்றுள்ளன.

    பல்கலைக்கழகங்களின் பட்டியலில், பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 14-வது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 21-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 50-வது இடத்திலும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

    கல்லூரிகளைப் பொறுத்தவரையில், டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்வி நிறுவனம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடத்திலும், லயோலா கல்லூரி 7-வது இடத்திலும் என தமிழ்நாட்டை சேர்ந்த 35 கல்லூரிகள் இடத்தை தக்க வைத்திருக்கின்றன.

    என்ஜினீயரிங் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலாவது இடத்திலும், திருச்சி என்.ஐ.டி. 9-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 13-வது இடத்திலும் என மொத்தம் 15 என்ஜினீயரிங் கல்லூரிகள் வந்துள்ளன.

    மருத்துவக் கல்லூரி வரிசையில், தமிழ்நாட்டில் இருந்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3-வது இடத்திலும், சென்னை மருத்துவக் கல்லூரி 11-வது இடத்திலும் என 8 மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இதேபோல், ஆராய்ச்சி பிரிவில் 9 கல்வி நிறுவனங்களும், மேலாண்மை பிரிவில் 10 கல்லூரிகளும், துணை மருத்துவத்தில் 9 கல்வி நிறுவனங்களும், பல் மருத்துவத்தில் 7 கல்லூரிகளும், சட்டப்படிப்பில் 2 கல்வி நிறுவனங்களும் கட்டிடம் மற்றும் திட்டமிடல் பிரிவில் 3 கல்லூரிகளும், வேளாண்மை சார்ந்த படிப்புகளில் 5 கல்வி நிறுவனங்களும், புதுமையான கண்டுபிடிப்புகளில் 2 கல்லூரிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களாக இடம்பெற்று அசத்தி இருக்கின்றன.

    கடந்த ஆண்டுகளுடன் இந்த ஆண்டு தரவரிசை பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

    இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறியதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி.யின் சிறந்த தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நிறுவனத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஊழியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள எங்கள் முன்னாள் மாணவர்களின் அசைக்க முடியாத ஆதரவின் ஓய்வில்லாத முயற்சி போன்றவற்றாலேயே இது (தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில் முதல் இடம்) சாத்தியமாகியிருக்கிறது.

    எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கல்வி அமைச்சகம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்யவேண்டும் என்பதை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம். சென்னை ஐ.ஐ.டி.யை உள்நாட்டில் பொருத்தமானதாகவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகவும் உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×