என் மலர்
உள்ளூர் செய்திகள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு 53 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி ஏராளமானோர் நீராடி தர்ப்பணம் செய்தனர்
- மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று அருவியில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கவேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடப்பட்டது.
- சுருளி அருவி பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மழை நின்ற பிறகும் ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் உள்ள அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
இதனால் சுருளி அருவியில் குளிக்க பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த அருவியில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வருபவர்களும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் புனித நீராடி செல்வது வழக்கம்.
ஆனால் குளிக்க அனுமதி கிடைக்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று அருவியில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கவேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து 53 நாட்களுக்குப் பிறகு சுருளி அருவியில் குளிக்க இன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிகாலை முதல் அங்கு வந்த பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த வழிபட்டு சென்றனர். இதனால் சுருளி அருவி பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.