என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாகை-இலங்கை காங்கேசன் துறைக்கு மேலும் ஒரு கப்பல் சேவை: ஜனவரியில் இயக்க திட்டம்
- இலங்கை நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டம்.
- சுமார் 250 நபர்கள் பயணிக்கும் வகையில் இயக்க திட்டமிட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
இந்தியா, இலங்கை நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 10-ந்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கப்பல் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் பயணிகள், கப்பலை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இதன் காரணமாக நாகையில் இருந்து இலங்கைக்கு கூடுதலாக ஒரு கப்பல் இயக்க வேண்டும் என இந்தியா, இலங்கை நாட்டு வர்த்தகர்களிடையே கோரிக்கை எழுந்தது.
இதனை பரிசீலித்த சிவகங்கை கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம், அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் சுமார் 250 நபர்கள் பயணிக்கும் வகையில் மேலும் ஒரு புதிய கப்பலை நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்க திட்டமிட்டு உள்ளது.
இத்தகவலை நாகையில் நடந்த நாட்டிலஸ் ஷிப்பிங் கருத்தரங்க கூட்டத்தில் சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்தது.
அப்போது கடல்சார் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பணிகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் அதற்கான சிறந்த ஊதியம் உள்ளிட்டவைகள் குறித்து, மாலுமிகள், என்ஜினீயர்கள், பயனாளர்கள் மத்தியில் நாட்டிலஸ் ஷிப்பிங் நிறுவன கேப்டன், ஆர்.கே.சிங் மற்றும் சுபம் கப்பல் நிறுவன பொறுப்பாளர் கீதா ராஜராஜன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
மேலும், கடல்சார் கல்வி மற்றும் பயிற்சியை முடித்த உள்ளூர் கடலோடிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு சுற்றுலா மற்றும் வர்த்தக கப்பல்களில் வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.