என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை யொட்டி ஊட்டி சிறப்பு மலை ரெயில் இயக்கம்
- 28-ந்தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
- ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
மேட்டுப்பாளையம்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கு தினமும் 3 முறை மலை ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவித்தது.
மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து இன்று, வருகிற 27, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாளை, 28, 30 மற்றும் வரும் ஜனவரி 1-ந் தேதிகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வருகிற 28-ந் தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வருகிற 28-ந் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு சிறப்பு மலைரெயில் ஊட்டி நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ரெயிலில் ஏறி உற்சாகத்துடன் பயணித்தனர். சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.