search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெல்லை பஜார்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    • பல்வேறு அளவுகளில் அவல், பொரிகளை பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
    • அளவை பொறுத்து பனை ஓலைகள் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை வீடுகளில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள்.

    களை கட்டிய பஜார்கள்

    இதையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கடைகளுக்கு செல்வ தால் நெல்லையில் மார்கெட்டுகள் மற்றும் முக்கிய பஜார்களில் பொருட்கள் விற்பனைகளை கட்டி உள்ளது.

    கார்த்திகை தீப வழிபாட்டுக்குரிய அவல், பொரி கடலை, இலை, பூ, பழம், அகல் விளக்குகள், கொழுக்கட்டை தயாரிக்க பயன்படுத்தும் பனை ஓலை, சிறுவர்கள் கொளுத்தி மகிழும் சூந்து குச்சி போன்றவைகளை வாங்குவதற்காக இன்று டவுன் ரதவீதிகள், பாளை மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியதை காண முடிந்தது.

    அவல், பொரி- பனை ஓலை

    பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டத்தில் காத்து நிற்பதை தடுக்கும் விதமாக அவல், பொரி உள்ளிட்டவைகளை பல்வேறு அளவுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

    பாளை தெற்கு பஜார், மகாராஜா நகர், மேலப் பாளையம் உழவர் சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட தேவையான பூஜை பொருட்கள் உள ளிட்டவை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பாளை மார்க்கெட், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளிலும் பனை ஓலை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அவை பெரியது, சிறியது என அளவை பொறுத்து ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    அகல் விளக்குகள்

    இதேபோல் முக்கிய இடம் பிடிக்கும் அகல் விளக்குகளின் விற்பனையும் சூடு பிடித்தது. டவுன் ரதவீதிகளில் உள்ள தற்காலிக தள்ளுவண்டி கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிவன் விளக்கு, அகல் விளக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது.

    மேலும் புதுவரவான மயில் விளக்கு, யானை விளக்கு, லட்சுமி விளக்கு ஆகியவை ரூ.250-க்கும், தாமரை பூ விளக்கு ரூ.100-க்கும், பாவை விளக்கு ரூ.80-க்கும், அணையா விளக்கு ரூ.70-க்கும், துளசி மாடம் ரூ. 30-க்கும் விற்பனையானது. சுமார் 250 வகையான விளக்குகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    மண் விளக்குகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களில் அவர்கள் விரும்பும் டிசைன்களை உடனுக்குடன் தயார் செய்தும் சில கடைகளில் வழங்கினர். அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    Next Story
    ×