என் மலர்
உள்ளூர் செய்திகள்

சு.ஆடுதுறை ஊராட்சியில் கோவில் நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- சு.ஆடுதுறை ஊராட்சியில் கோவில் நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கீதா ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து சு.ஆடுதுறை ஊராட்சியில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான பெரியாண்டவர் கோவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்தபோது அதே ஊரை சேர்ந்த ஒருவர் 10 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து பயிரிட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் அந்த சமுதாய மக்கள் நிலத்தை சரியாக அளந்து கல்நடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு ஆக்கிரமிப்புக்காரர் நிலத்தில் பயிரிட்டுள்ளதாக கூறப்படும் நபர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்கக்கோரி அந்த சமுதாய மக்கள் திருமாந்துறை-அகரம்சீகூர் சாலையில் குருசாமி என்பவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கீதா ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் பயிர் அறுவடை செய்த பின், ஒரு மாத கால அவகாசத்தில் நில அளவை செய்யபடும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






