search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கிணத்துக்கடவில் பெரியார் சிலை அவமதிப்பு
    X

    கோவை கிணத்துக்கடவில் பெரியார் சிலை அவமதிப்பு

    • சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது.
    • போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள்.

    சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது. கம்பி வேலி அமைக்கப்பட்டு அதற்குள் சிலை மிகவும் பாதுகாப்புடன் இருந்தது.

    இந்தநிலையில் இன்று காலை அந்த பெரியார் சிலை மீது யாரோ மாட்டு சாணத்தை வீசி அவமதிப்பு செய்து இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிலையின் மீது வீசப்பட்டு இருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். இந்த செயலில் ஈடுபட்டது யார், எதற்காக ஈடுபட்டனர் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தகவல் அறிந்த திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அங்கு திரண்டனர். இதனால் கிணத்துக்கடவு சமத்துவபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு கருதி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். பெரியார் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகாரில் கூறி இருந்தனர்.

    இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில் மக்கள் மத்தியில் வேற்றுமை இருக்கக் கூடாது. ஒற்றுமையாக சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது சமத்துவ புரங்கள். அதற்கு பெரியாரின் பெயரையே சூட்டினார்.

    அத்தகைய சமத்துவபுரத்தில் இருந்த பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட செயல் சமூக ஒற்றுைமயை சீர்குலைக்க நடத்தப்பட்ட சதி ஆகும். எனவே இதில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×