search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பைகள்
    X

    தருமபுரி மாவட்டத்தில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பைகள்

    • பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு உலைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் துணிப்பையை அறிமுகப்படுத்தியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு பரவலாக அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்ச துணிப்பை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. விழிப்புணர்வும் பரவலாக இருந்தது.

    இந்தநிலையில் தருமபுரி மாவட்டத்தில் தற்போது திருவிழாக்காலம் என்பதால் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உலைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தர்மபுரி நகரப் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. காய்கறி கடைகள், பிளாட்பார கடைகள், இறைச்சி கடைகள், உணவகங்கள், தள்ளுவண்டி உணவகங்கள், பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் அரசு தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் தாராளமாக புழக்கத்தில் இருந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

    தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் வாங்கி வரும் தின்பண்டங்கள், உணவு வகைகளை தவிர சிகிச்சை பிரிவுக்கு தேவையான மருந்து வகைகள் உள்ளிட்டவைகளை பிளாஸ்டிக் கவர்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    மருத்துவமனையில் தின்பண்டங்கள் உணவு உள்ளிட்டவைகளை பயன்படுத்திய பிறகு பிளாஸ்டிக் பைகளை ஆங்காங்கே வீசி எரிவதால் மருத்துவமனை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகிறது. இது மட்டுமின்றி நகரப் பகுதி மற்றும் தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட நகரங்களில் தெருவில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகளை நிறைந்து காணப்படுகிறது.

    இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:

    இந்தியாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாள் ஒன்றுக்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவை கணக்கிட்டால், எதிர்காலத்தில் இந்தியா பெரும் சுகாதார கேடை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு பெரும்பாலான மளிகைக் கடைகள், உழவர் சந்தை, ஜவுளிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறைந்த நிலையில் இந்த நடைமுறை ஒரு சில மாதங்கள் மட்டுமே பின்பற்றப்பட்டது. பின்னர் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.

    பிளாஸ்டிக் பைகள் பயன் பாட்டை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். மாநில அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் துணிப்பையை அறிமுகப்படுத்தியது.

    தற்போது தர்மபுரி மாவட்டத்தில் ஆடித் திருவிழாக்கள் கொண்டாடப் பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை பயன்படுத்தி விட்டு மக்கள் ஆங்காங்கே வீசிச்செல்கின்றனர். எளிதில் மக்காத இதுபோன்ற பிளாஸ்டிக் பைகள் மண்ணின் வளத்தை சிதைத்து விடும். தருமபுரி நகரப் பகுதிகளிலும் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து 15 வார்டுகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

    Next Story
    ×