என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
செல்போன் டவர் அமைப்பதாக இணையதளத்தில் நூதன மோசடி செய்யும் கும்பல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
- டவர் அமைக்க ரூ.50 முதல் ரூ.80 லட்சம் வரை அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும், மாதம் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வாடகை செலுத்துவதாகவும் கூறி கும்பல்கள் மோசடி செய்து வருகின்றன.
- தமிழகத்தில் செல்போன் டவர் அமைப்பதாக மோசடி செய்யும் கும்பல், வடமாநிலங்களில் இருந்து கைவரிசை காட்டி வருகிறது.
குள்ளனம்பட்டி:
இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் பயன்பாடு அவசியமாகிவிட்டது. ஸ்மார்ட் போன்கள் மூலம் உலகமே கையடக்கத்தில் வந்துவிடுகின்றன.இந்நிலையில் அதிகப்படியானோர் ஆன்லைன் வகுப்புகளுக்கு இண்டர்நெட் பயன்படுத்துவதால், அலைக்கற்றை வேகம் குறைய வாய்ப்புள்ளது.
இதனால் அதிகப்படியான செல்போன் டவர்கள் அமைப்பது அவசியம்.இதை சாதகமாக பயன்படுத்தி மோசடி கும்பல் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி கைவரிசை காட்டி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடிவதில்லை.எனவே மோசடி கும்பல்கள் உங்களை தொடர்பு கொண்டால் ஏமாற வேண்டாம்.
அதேபோல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி சந்திரன் கூறியதாவது: செல்போன் டவர் அமைக்க காலி இடம் அல்லது மொட்டை மாடி இருந்தால் ரூ.50 முதல் ரூ.80 லட்சம் வரை அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும், மாதம் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வாடகை செலுத்துவதாகவும் கூறி கும்பல்கள் மோசடி செய்து வருகின்றன. இதற்காக உரிய அனுமதி பெற்றதாக போலி கடிதத்தையும் வைத்திருக்கின்றனர்.
இதை நம்பும் பலர் டவர் அமைக்க இடம் கொடுப்பதாக ஒப்புக்கொள்கின்றனர்.அவ்வாறு ஏமாறும் நபரிடம் 'உங்களது வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் செலுத்துவதற்கு, முன்பணம் ரூ.1.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும். இந்த தொகை ரூ.80 லட்சத்துடன் சேர்ந்து வந்துவிடும்' என்றும் கூறுகின்றனர்.
இதுபோன்ற மோசடி வலையில் விழுபவர்கள் ரூ.1.5 லட்சம் கொடுத்து ஏமாந்து போகின்றனர்.உண்மையில் செல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற வேண்டியது அவசியம். இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ளாமல் ரூ.20 லட்சம் கூட போகாத இடத்துக்கு ரூ.80 லட்சம் அட்வான்ஸ் கிடைக்கிறதே என்று நம்பி சிலர் பணத்தை இழந்துவிடுகின்றனர்.
தமிழகத்தில் செல்போன் டவர் அமைப்பதாக மோசடி செய்யும் கும்பல், வடமாநிலங்களில் இருந்து கைவரிசை காட்டி வருகிறது. இதனால் புகார் தெரிவித்தாலும் அவர்களை பிடிக்க முடிவதில்லை. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு தெரிவித்தார்.






