என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகரை யானைகள் துதிக்கையை தூக்கி வழிப்பட்ட காட்சி.
டாப்சிலிப்பில் வளர்ப்பு யானைகள் முகாமில் பொங்கல் விழா
- துதிக்கையை உயர்த்தி விநாயகரை யானைகள் வழிபட்டன.
- யானைகள் துதிக்கையால் தண்ணீரை விநாயகர் மீது ஊற்றி அபிஷேகம் செய்தன.
கோவை :
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பை அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து அதற்கு பயிற்சி அளித்து வளர்த்து வருகின்றனர். மேலும் கும்கி யானைகளும் உள்ளன. ஆண்டுதோறும் பொங்கலுக்கு மறுநாள் யானை பொங்கல் விழா கொண்டாடப்படும்.
அதன்படி கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் யானை பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலைவாழ் மக்களுடன் சுற்றுலா பயணிகள் சேர்ந்து பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து முகாமில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக வளர்ப்பு யானைகள் துதிக்கையால் தண்ணீரை விநாயகர் மீது ஊற்றி அபிஷேகம் செய்தன. இதை தொடர்ந்து யானைகள் துதிக்கையை தூக்கி விநாயகரை வழிபட்டன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோழிகமுத்தி, வரகளியாறு முகாம்களில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கலீம், கபில்தேவ், முத்து ஆகிய யானைகள் காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் காரணமாக அந்த 3 யானைகளும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவில்லை. விழாவில் யானைகளுக்கு ஆப்பிள், கரும்பு, வாழைப்பழம், பொங்கல், ராகி உள்ளிட்டவை வழங்கப்பட்டன என்றனர்.






