search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் முதல் முறையாக 26, 27-ந்தேதிகளில் பொருநை இலக்கிய திருவிழா - கலெக்டர் விஷ்ணு தகவல்
    X

    பொருநை இலக்கிய திருவிழா குறித்த லோகோவை கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட காட்சி. அருகில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் ஆகியோர் உள்ளனர்.

    நெல்லையில் முதல் முறையாக 26, 27-ந்தேதிகளில் பொருநை இலக்கிய திருவிழா - கலெக்டர் விஷ்ணு தகவல்

    • தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
    • பொருநை இலக்கிய திருவிழா குறித்த லோகோவை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வருகிற 26, 27 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    கலெக்டர் பேட்டி

    இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில் முதல் திருவிழாவாக நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வரும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    5 அரங்குகள்

    இந்த பொருநை திருவிழாவில் தனித் தனியாக மொத்தம் 5 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி நேருஜி அரங்கம், நூற்றாண்டு மண்டபம் வ.உ.சி அரங்கம், பி.பி.எல். திருமண மண்டபம், பாளை மேற்கு கோட்டை வாசல் ஆகிய 5 அரங்குகளில் திருவிழா நடைபெறும்.

    இதில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த உள்ளன. இதுகுறித்து அந்தந்த பள்ளி கல்லூரி நிர்வாகத்தினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    ஓலைச்சுவடிகள்

    இலக்கிய திருவிழாவில் ஓலைச்சுவடிகள் மற்றும் நாட்டுப்புற கலை பொருட்கள் குறித்து காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே நெல்லை புத்தக திருவிழாவில் கலை பொருட்கள் காட்சிப்படுத்தியிருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    எனவே பொதுமக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்களிடம் ஓலைச்சுவடி நாட்டுப்புற கலை பொருட்கள் இருப்பின் வரும் 24-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவ லகத்தில் மக்கள் தொடர்பு அலுவலரிடம் வழங்கலாம்.

    பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

    பொருநை இலக்கிய திருவிழா தொடர்பான லோகோ இன்று வெளியிடப்படுகிறது. https://porunailitfest.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இலக்கிய திருவிழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மண்டல அளவில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து இத்திருவிழா நடக்கிறது

    நெல்லையில் கானி மக்கள் மத்தியில் இருக்க கூடிய மருத்துவம் சார்ந்த விஷயங்களை டிஜிட்டல் மையம் ஆக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொருநை இலக்கிய திருவிழா குறித்த லோகோவை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார். அப்போது மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×