என் மலர்
உள்ளூர் செய்திகள்
கடலூர்-சிதம்பரம் இடையே தனியார் பஸ்கள் ஓடவில்லை: கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
- 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
கடலூர்:
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. மேலும் கட்டண விவரங்களையும் வெளியிட்டது.
இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சாலை பணி முழுமை பெறாமல் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது. மேலும் கட்டண விகிதம் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.
இதற்கிடையில் இந்த போராட்டத்தை யொட்டி கடலூர்-சிதம்பரம் இடையே தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவித்துள்ளனர்.
இதுபற்றி கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் தேசிங்குராஜன் கூறுகையில், கொத்தட்டை சுங்கச்சாவடியில் 50 முறை சென்றால் ஒரு மாத கட்டணம் ரூ.14 ஆயிரத்து 90 அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வட்டார போக்குவரத்து அதிகாரி நிர்ணயித்த கால நேர அட்டவணைப்படி ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை சட்டப்படி பஸ்கள் இயங்கி வருகிறது. இப்படி என்றால் 5 நாளில் ஒரு மாத கணக்கு தீர்ந்து விடும். ஆகவே இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இன்று கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் ஓடாது.
இந்த பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம். இது தொடர்பாக சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தின் தீவிரம் குறித்து அறிவிப்போம் என்றார்.
அதன்படி இன்று காலை கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளானார்கள்.
அவர்கள் அரசு சார்பில் இயக்கப்பட்ட பஸ்களில் சென்றனர். இதனால் பணிக்கு செல்ல வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல இயலாமல் தவித்தனர்.
இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் அனைத்து பஸ்களையும் கொத்தட்டை சுங்கச்சாவடிக்கு கொண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.
அதேபோல் கொத்தட்டை சுங்கச்சாவடி சுற்று வட்டார கிராம மக்களும், அனைத்து கட்சியினர், சமூகநல அமைப்பினர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.