என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் வெள்ளிக் கொலுசுகள் உற்பத்தி தீவிரம்
- சேலத்தில் செவ்வாய்பேட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
- பொங்கலையொட்டி ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், சேலம் வெள்ளி மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
அன்னதானப்பட்டி:
சேலத்தில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, மணியனூர், தாதகாப்பட்டி, லைன்மேடு, கொண்டலாம்பட்டி, பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தான்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கால் கொலுசுகள், அரைஞாண் கயிறு, சந்தன கிண்ணம், குங்குமச் சிமிழ், தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
குறிப்பாக வட மாநிலங்களில் சேலம் வெள்ளிப் பொருட்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. ஏனென்றால் சேலத்தில் தயார் செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் சீக்கிரம் கருக்காது என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் மனதில் தனி நம்பிக்கை உள்ளது.
பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெள்ளி வியாபாரிகள்,சேலம் வெள்ளி வியாபாரிகளிடம் கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களுக்கு ஆர்டர்கள் தந்து வருகின்றனர்.
பொங்கலையொட்டி ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், சேலம் வெள்ளி மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
இது குறித்து வெள்ளி வியாபாரிகள் கூறுகையில், "ஒவ்வோர் வருடமும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா மாநில வெள்ளி வியாபாரிகளும் சேலம் வெள்ளிவியாபாரிகளிடம் ஆர்டர்கள் தருவது வழக்கம் ஆகும். இந்த வருடம் பொங்கல் பண்டிகை, தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து திருமண முகூர்த்த தினங்கள் வருவதால், கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக 'லைட் வெயிட்' எனப்படும் எடை குறைவாக உள்ள கொலுசுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த மாடல் கொலுசுகளை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறோம். கால்கொலுசுகளுக்கு அடுத்தப்படியாக அரைஞாண் கயிறு, டம்ளர்கள் உள்ளிட்டவை அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளிக்கட்டி ரூ.66 ஆயிரத்துக்கு விற்றது. கடந்த ஓராண்டாக தங்கம் , வெள்ளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
விலை உயர்வு இருந்த போதிலும், பொங்கல் பண்டிகை ஆர்டர்கள் அதிகளவில் வருவதன் காரணமாக, வெள்ளிப் பட்டறைகளில் உற்பத்தி மற்றும் வேலை நேரத்தை அதிகப்படுத்தி உள்ளோம். உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களை அந்தந்த பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பொங்கலுக்கு முந்தைய நாள் வரை இந்த வேலைகள் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்