search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குவாரிகள் இயங்க தடை: கல், மணல் கிடைக்காததால் கட்டுமான பணிகள் பாதிப்பு
    X

    குவாரிகள் இயங்க தடை: கல், மணல் கிடைக்காததால் கட்டுமான பணிகள் பாதிப்பு

    • குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் கல், மணல் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பாதிப்படைந்துள்ளது.
    • கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் தனியார் கல்குவாரியில் கடந்த மாதம் நடந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா? விதிமீறல்கள் நடந்துள்ளனவா என்பதை அறிய மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் 6 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

    இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து குண்டு கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவைகளை அள்ளுவதற்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல், மணல் உள்ளிட்டவை கிடைக்காததால் வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றின் கட்டுமான பணிகள் தடைபட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாததால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. 2 மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தான் கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யவேண்டி உள்ளது. அவ்வாறு செய்தால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து விடுகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் பெண்கள் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.

    இந்த வேலையை நம்பி மகளிர் சுயஉதவிக்குழு, வீட்டின் அன்றாட செலவுகள், குழந்தைகளின் பள்ளி படிப்புச்செலவு உள்ளிட்டவை இருப்பதாகவும், சுமார் ஒரு மாதமாக வேலை இல்லை எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    நெல்லையில் உள்ள 55 குவாரிகளிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் லாரிகள், பொக்லைன் ஓட்டுதல், வெடிமருந்து வைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தடையால் குடும்ப செலவுக்கு தவித்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகங்கள் விரைந்து குவாரிகளை ஆய்வு செய்து முடிக்க வேண்டும். எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக கல்குவாரிகளில் இருந்து கல், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை அள்ளுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×