search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆண்டுகளில் 3.36 கோடி பெண்கள் இலவச பயணம்
    X

    2 ஆண்டுகளில் 3.36 கோடி பெண்கள் இலவச பயணம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 3.36 கோடி பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர்.
    • திருக்குறளை திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 5 திட்டங்களை செயல்படுத்து வதற்கு கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு நிதிசுமை குறைந்து பயனடைவார்கள்.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயணம் செய்பவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா தனி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் 6 டெப்போக்கள் செயல்பட்டு வருகின்றன. டவுன் பஸ்கள் ஏறத்தாழ 120 வழித்தடங்களிலும், புறநகர் பஸ்கள் 200க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுநாள் வரை 3 கோடி 36 லட்சத்து 52 ஆயிரத்து 835 பெண்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 613 மாற்றுத்திறனாளிகள், 10 ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள், 12 ஆயிரத்து 767 மூன்றாம் பாலினர்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெண்கள் இத்திட்டத்தின் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

    அதே போல, தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அய்யன் திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×