search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நம்ம ஊரு சூப்பர் தூய்மை திட்ட பணிகள் தொடக்கம்
    X

    விழாவில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ''நம்ம ஊரு சூப்பர்" தூய்மை திட்ட பணிகள் தொடக்கம்

    • ‘‘நம்ம ஊரு சூப்பர்” தூய்மை திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.
    • வீட்டில் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், களிமண் குண்டு ஊராட்சியில் வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் நடந்தது.

    அரசு முதன்மைச் செயலர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமை தாங்கி களிமண்குண்டு ஊராட்சி யில் உள்ள கடற்கரைப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருப்பு ல்லாணி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் "நம்ம ஊரு சூப்பர்" தூய்மை திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் பொதுமக்களுடன் அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் "நம்ம ஊரு சூப்பரு''க்கான உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் குப்பையில்லா கிராமங்களை உருவாக்கி, சுகாதாரத்தை காப்பதற்காக நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும். மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும்.

    பொது இடங்களில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்யக் கூடாது. வீடு மற்றும் தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

    ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. கடைக்குச் செல்லும் போது கண்டிப்பாக துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வீட்டிலும் பொது இடங்களிலும் மரங்களை நட வேண்டும்,

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

    தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் காய்கறி தோட்டத்தை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகர், தோட்டக்கலை துணை இயக்குநர் நாகராஜன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் புல்லாணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×