search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கை தமிழர்களை  அகதிகளாக அங்கீகரிக்க வேண்டும்
    X

    இலங்கை தமிழர்களை அகதிகளாக அங்கீகரிக்க வேண்டும்

    • இலங்கை தமிழர்களை அகதிகளாக அங்கரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    • வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும்.

    ராமநாதபுரம்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் இன்று வரை 200-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களை தற்போது வரை அகதிகளாக பதியாமல் அவர்களுக்கு தமிழக அரசு உணவு, தங்குமி டம் மட்டும்வழங்கி வருகிறது.இலங்கையில் இருந்து வந்துள்ள தங்களை அகதிகளாக பதிய வேண்டும் என இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இது குறித்து முகாமில் உள்ள தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, மத்திய அரசு சார்பில் தற்போது வரை அகதிகளாக பதிவு செய்ய எந்த விதமான அதிகாரப்பூர்வ உத்தரவும் வரவில்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் தான் அவர்களை தற்போது இங்கு தங்க வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதே நிலை நீடித்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த மாதம் 24-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள் அண்ணா துரை, அருள், கருணாநிதி, மனோகரன், ராமலிங்கம், விசுவநாதன் உள்ளிட்டவர்கள் வந்து இருந்தனர். பின்னர் இந்த குழுவினர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்றனர்.

    அங்கு வசிக்கக்கூடிய இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். இலங்கை தமிழர்களை அகதிகளாக பதிவு செய்ய கலெக்டருக்கு இக்குழு பரிந்துரை செய்தது.

    தற்போது புதியதாக இலங்கையில் இருந்து வரும் மக்களுக்கான மாதாந்திர உதவித்தொகை பெற்றுத்தர இலங்கை தமிழர் நல ஆணையரிடம் குழுவினர் பரிந்துரை செய்யும் எனவும் தெரிவித்தனர். இருப்பினும் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இதுகுறித்து மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புதிதாக வந்த இலங்கை தமிழர்கள் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-

    இலங்கையில் நாங்கள் பட்ட கஷ்டத்தை காட்டிலும் இங்கு நிம்மதியாக இருக்கிறோம். இங்கு வந்த பிறகுதான் பிள்ளைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எங்களை வெளியே வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு அதிகாரிகளை கேட்கிறோம். ஆனால் எங்களை வெளியே செல்ல அனு மதிக்கவில்லை. எங்களை வேலைக்கு போக அனுமதித்தால் தானே எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும். தொடர்ந்து பதிவு இல்லாமல் எங்களால் எத்தனை மாதம் இப்படி இருக்க முடியும். இலங்கையை விட இங்கு காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. இருப்பினும் நாங்கள் வந்த நாள் முதல் இதுவரை வீட்டில் சமைக்கவில்லை. எங்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கப்படு கிறது. அந்த உணவை சாப்பிட்டு வருகிறோம். தற்போது அகதிகள் முகாமில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நாங்கள் அதிகாரியிடம் கூறியபோது, விரைவில் சரி செய்து தருவதாக தெரிவித்த னர். ஆனால் இதுவரை சரி செய்யவில்லை. எங்களுக்கு பாய், மின்விசிறி, தண்ணீர் குடம், உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் எங்களுக்கு எப்படி போதுமானதாக இருக்கும். எங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும். எனவே எங்களை உடனடியாக அகதிகளாக பதிவு செய்ய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×