என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி 3 நாள் நடை பயணம் நிறைவு

- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 3 நாள் நடை பயணமாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
- சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது.
ராமநாதபுரம்
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது. நேற்று மாலை பட்டினங்காத்தான் இ.சி.ஆர். சாலையில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள் நடைபயணம் மேற்கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு நடந்த விளக்க கூட்டத்திற்கு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில தணிக்கையாளர் ஊரக வளர்ச்சித் துறை சோமசுந்தர் வரவேற்றார். தமிழ்நாடு விடுதிகள் காப்பாளர் சங்கத்தின் மாநில செயலாளர் மணிமொழி, சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், வருவாய்த்துறை சீனி முகம்மது உள்பட பலர் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பத்திரப் பதிவுத்துறை சுரேஷ், கருவூலத்துறை கிருஷ்ணமூர்த்தி, மருத்துவத்துறை சின்னபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க நிர்வாகிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.