search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசியக் கொடி அனுப்பும் பணி மும்முரம்
    X

    தேசியக் கொடி அனுப்பும் பணி மும்முரம்

    • ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களுக்கு தேசியக் கொடி அனுப்பும் பணி நடந்து வருகிறது.
    • தேசியக்கொடி ரூ.21 என விலை நிா்ணயிக்கப்பட்டு வீடு, வீடாக நேற்று விநியோகிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப்பெரு விழாவை யொட்டி அனைத்து வீடுகள், அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

    அதனடிப்படையில் மாவட்ட அளவில் 1 லட்சத்து 50 ஆயிரம் தேசியக்கொடிகள் பொதுமக்கள், அரசு அலுவலா்கள் ஆகியோருக்கு விநியோகிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக்குழு மூலம் ஏற்கெனவே 50 ஆயிரம் தேசியக் கொடிகள் நகராட்சி, பேரூராட்சிகளில் விநியோகி க்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து 1 லட்சம் தேசியக் கொடிகள் 10-க்கும் மேற்பட்ட பண்டல்களாக கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவை பிரிக்கப்பட்டு, அதிலிருந்த தேசியக் கொடிகளில் நகராட்சிகளில் ராமநாதபுரம், பரமக்குடிக்கு தலா 3 ஆயிரம், கீழக்கரை 1500, ராமேசுவரம் 1000 என அனுப்பி வைக்கப்பட்டது.

    ஒன்றிய அளவில் ராமநாதபுரம் 7,900, திருப்புல்லாணி 8,900, மண்டபம் 11,300, ஆா்எஸ்.மங்கலம் 4,900, திருவாடானை 7,700, போகலூா் 3,000, பரமக்குடி 5,700, நயினாா்கோவில் 3,500, முதுகுளத்தூா் 6,400, கமுதி 7,700, கடலாடி 11,500 என தேசியக் கொடிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மீதமுள்ள கொடிகள் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் நகராட்சி வாா்டுகளில் தேசியக்கொடி ரூ.21 என விலை நிா்ணயிக்கப்பட்டு வீடு வீடாக நேற்று விநியோகிக்கப்பட்டது. மேலும் கொடியைப் பெற்றுக் கொண்டவா்கள் முகவரி விவரம் பதிவு செய்யப்பட்டதுடன், சுதந்திரதினத்துக்குப் பிறகு தேசியக் கொடியை மீண்டும் அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட மகளிர் திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களுக்கு குறைந்தது 1000 முதல் அதிகபட்சம் 11,300 வரை தேசியக் கொடிகள் விற்பனைக்கு அனுப்பியுள்ளனர்.

    மேற்கண்ட பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர், சுகாதாரப்பணியாளர்கள், அலுவலர்கள் வீடுவீடாக சென்று ஒரு தேசியக்கொடி ரூ.21 வீதம் விற்கின்றனர். அப்போது அவர்களின் பெயரை எழுதிக் கொள்கின்றனர். 3 நாட்களுக்கு பிறகு தேசியக்கொடியை மீண்டும் திரும்ப வழங்க வேண்டும், என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அனைத்து வீடுகளிலும் 3 நாட்கள் தேசியக்கொடி பறக்க விட வேண்டும். அதன் பிறகும் கொடியை பாதுகாப்பது அவசியமாகும். சிலர் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் தேசியக்கொடிக்கு அவமதிப்பு ஏற்படுவதை தவிர்க்க விற்பனை செய்த கொடிகளை மீண்டும் திரும்ப வாங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கு அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×