search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்- பாளை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றினார்

    • நாடு முழுவதும் 74-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    நாடு முழுவதும் 74-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    தேசிய கொடி ஏற்றினார்

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து போலீ சாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட 7 துறைகளை சேர்ந்த 19 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்து 247 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    மாநகராட்சி கமிஷனருக்கு நற்சான்று

    விழாவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 243 பேருக்கு நற்சான்றுகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார். இதில் மாநகராட்சி சார்பில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு சான்று வழங்கப்பட்டது.

    மேலும் பொறியியல் பிரிவில் சிறப்பாக பணியாற்றி யமைக்காக உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராமசாமி, இளநிலை பொறியாளர் ராமநாதன் ஆகியோருக்கும், பொதுசுகாதார பணிகளில் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோவுக்கும் நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் 2023-ம் ஆண்டுக்கான தமிழக முதல்-அமைச்சர் காவலர் பதக்கம் அறிவிக்கப்பட்ட 100 காவலர்களுக்கு பதக்கங் களையும் அவர் வழங்கினார். விழாவையொட்டி வ.உ.சி. மைதானம் முழுமை யாக போலீசாரின் கட்டுப்பாட்டு க்குள் கொண்டு வரப்பட்டது.

    உணவு பகுப்பாய்வு வாகனம்

    விழாவின்போது பாளை உணவு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு ஒதுக்கப்பட்ட நடமாடும் உணவு பகுப்பாய்வகம் எனப்படும் வாகனத்தை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனமானது பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. மேலும் இந்த வாகனத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது சத்தான உணவினை உட்கொள்ள வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    கலை நிகழ்ச்சிகள்

    விழாவில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சந்திப்பு மீனாட்சிபுரம் மற்றும் பர்கிட் மாநகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 24 பேர் செவ்வியல் நடனமாடினர். பேட்டை ராணி அண்ணா பள்ளி, ஜவகர் பள்ளி, கல்லணை பள்ளி மாணவிகள் கும்மி நடமாடினர். தொடர்ந்து பர்கிட் மாநகர் பள்ளி மாணவர்கள் கணியன் கூத்து மற்றும் பறை ஆட்டமும், மூலக்கரைப்பட்டி மாணவர்கள் நாட்டுப்புற நடனமும் ஆடினர். கடைசியாக செண்டை மேளம் முழங்க மேற்கத்திய நடனம் நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×