search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.756 கோடி இருப்பு உள்ள விவகாரம்: தஞ்சை வாலிபரின் செல்போனுக்கு மெசேஜ் மூலம் மன்னிப்பு கேட்ட வங்கி நிர்வாகம்
    X

    கணேசன் செல்போனுக்கு தனியார் வங்கி அனுப்பிய குறுந்தகவல்.

    ரூ.756 கோடி இருப்பு உள்ள விவகாரம்: தஞ்சை வாலிபரின் செல்போனுக்கு மெசேஜ் மூலம் மன்னிப்பு கேட்ட வங்கி நிர்வாகம்

    • செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது.
    • நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசன் கடந்த 6-ந் தேதி நண்பர் ஒருவருக்கு தான் கணக்கு வைத்துள்ள தஞ்சை தனியார் வங்கி மூலம் ரூ.1000 செலுத்தினார். பின்னர் செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் அந்த தனியார் வங்கிக்கு சென்று இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து வங்கியில் உள்ளவர்கள் கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் எந்த தகவலும் தெரியாததால் கணேசன் வங்கி ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்துள்ளார். ஆனால், அதில் ரூ.756 கோடி இருப்பு தொகை காட்டாமல் அவரது சேமிப்பு தொகையை மட்டுமே காட்டியது.

    இந்நிலையில் கணேசன் செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சமீபத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான இருப்பு தொகை தவறாக காட்டப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கீழ்க்கண்ட இணைப்புக்குள் சென்று தங்களது இருப்பை சரி பார்த்துக் கொள்ளவும்.

    நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்ததால் கணேசன் நிம்மதி அடைந்துள்ளார்.

    Next Story
    ×