search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் ரூ.77½ லட்சம் மதிப்புள்ள தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை- கலெக்டர் தகவல்
    X

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    நெல்லை மாவட்டத்தில் ரூ.77½ லட்சம் மதிப்புள்ள தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை- கலெக்டர் தகவல்

    • மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும்.
    • விவசாயிகள் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிசான பருவத்தில் நடவு செய்யப்பட்ட 24 ஆயிரத்து 409 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பில், 17,500 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி முடிந்துள்ளது.

    விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊக்கத்தொகையுடன் கூடிய ஆதார விலையாக முதல் ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,160-ம், சாதாரண வகை நெல்லுக்கு ரூ.2,115-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் வளத்தை பெருக்கிட குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு சென்ற ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 251 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 56 கிராம பஞ்சாயத்துக்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தென்னங் கன்றுகள், விசை தெளிப்பான் உள்ளிட்ட இடு பொருட்கள் ரூ.62 லட்சம் மதிப்பில் 21 ஆயிரத்து 932 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும். இந்த மாதம் வரை பெற வேண்டிய மழை அளவு 121.7 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் இதுவரை 58.88 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. எனவே விவசாயிகள் குறைந்த நீரினை பயன்படுத்தி நீர் மேலாண்மை முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் ஆகிய உத்திகளை கையாண்டு சாகுபடி செய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.

    மாவட்டத்தில் 267 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. இங்கு இதுவரை 1,620 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 39 மாதிரிகள் தரமற்றதாக தெரிய வந்துள்ளது.

    37 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை நடவடிக்கையும், 2 விற்பனையாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்ட 57.76 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.77.50 லட்சம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார், சப்-கலெக்டர் சபிர் ஆலம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×