search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குஇன்னும் 8 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும்
    X

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குஇன்னும் 8 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும்

    • ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.
    • மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப் பட்டது. தற்போது குறுவை சாகுபடி அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இதனால் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு (12-ந்தேதி வரை) தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் உரிய தண்ணீரை தரவில்லை.

    இதனால் மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்த பிறகும் அதை கர்நாடக அரசு ஏற்க மறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறி விட்டது.

    இதனிடையே பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து 800 கன அடிக்கும் குறைவாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 507 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பாசனத்திற்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 45.01 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 44.06 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் குறைந்து 43.11 அடியானது.

    தற்போது அணையில் 13.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 5 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன் வளத்துக்கு பயன்படுத்தப்படும். நீர் திறப்பு ெதாடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.

    Next Story
    ×