search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை தருவதாக செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி நூதன முறையில் பெண் உட்பட 2 பேரிடம் ரூ.6 லட்சம் மோசடி
    X

    வேலை தருவதாக செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி நூதன முறையில் பெண் உட்பட 2 பேரிடம் ரூ.6 லட்சம் மோசடி

    • பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படு கிறார்கள்.
    • ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடக்கின்றன.

    சேலம்:

    மாறி வரும் நவீன தொழில் நுட்ப யுகத்துக்கு ஏற்ப சமீப காலமாக இணையவழிக் குற்றங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன. பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படு கிறார்கள்.

    இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடம் நம்ப வைத்து பணம் பறித்தல், ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடக்கின்றன. இத்தகைய குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற மின்னஞ்சல், வாட்சப் என போலியான தகவல்களை அனுப்பு கின்றனர். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்குக் எஸ்.எம்.எஸ்.அனுப்புகிறார்கள்.

    செல்போன் டவர் அமைத்துத் தருகிறோம், ஆஸ்திரேலியக் கப்பலில் வேலை வாங்கித் தருகிறோம், முத்ரா திட்டத்தில் மானிய மாகக் கடனளிக்கிறோம், வெளிநாட்டிலிருந்து சிறப்புப் பரிசு வந்திருக்கிறது அதைக் கொடுக்கிறோம், கொரோனா நிவாரணநிதி அளிக்கிறோம், வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறோம் என்று நேரத்திற்கு ஏற்றவாறு பேசுவார்கள். நம்பிக்கையை அதிகரிக்க போலியான மின்னஞ்சல், போலியான இணையதளத்தைக் கூடக் கொடுப்பார்கள்.

    இவ்வாறாக பெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டு முன்பணம் அல்லது சேவைக் கட்டணம் அல்லது சுங்கக் கட்டணம் என்று ஏதாவது சொல்லி, பணத்தைக் கட்டச் சொல் வார்கள். நமக்கும் ஆசை கண்ணை மறைப்பதால் கேள்வியே கேட்காமல் கேட்கும் தொகையை கட்டிவிடுவோம். அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்வோம்.

    சில நேரங்களில் பணமாகக் கேட்காமல் அறியாமையைப் பயன்படுத்த வங்கி அதிகாரியாக ஆதார் சரிபார்க்கிறோம், வருமான வரித்துறையினராக பான் சரிபார்க்கிறோம், ஆதார் - பான் அட்டை இணைக்கிறோம், தொலைத்தொடர்புத் துறையினராக கே.ஒய்.சி. சரிபார்ப்பு, கூரியர் வந்துள்ளது அடையாளத்தைச் சரி பார்க்கிறோம், கொரோனா தடுப்பூசி போடப் பதிவு செய்யச் சொல்லியோ கறாராகவும் பேசுவார்கள்.

    இவர்களை நம்பி பல தகவல்களைக் கொடுத்தால் ஏ.டி.எம்.கார்டின் எண், ரகசிய எண் என்று நேரடியாகக் கொடுத்து ஏமாறுபவர்கள் உண்டு. சில நேரம் ஓடிபி எண் மட்டும் கொடுத்து ஏமாறுபவர்களும் உண்டு. அட்டை என்னிடம் தானே இருக்கு எப்படி ஏமாற்ற முடியும் என நினைக்கலாம். ஆனால் அட்டை இல்லாமல் அட்டை எண்ணுடன் ரகசிய எண் மட்டும் கொடுத்து, பணத்தை எடுக்க முடியும். குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளில் பரிவர்த்தனை செய்தால் குறுஞ்செய்தி கூட இல்லாமல் பணம் மாற்றமுடியும்.

    வங்கியில் பணமில்லை என்றுகூட அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் ஓ.டி.பி. மூலம் கணக்கில் நுழைந்து, உங்கள் பெயரில் கடன் வாங்கி அந்தப் பணத்தைத் திருடிச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. நீங்கள் கொடுக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று மெல்லிய மிரட்டல்கள் வந்தாலும் இத்தகைய தகவல்களைப் பகிரவேண்டாம். வங்கியைத் தொடர்பு கொண்டு நிலையறிந்து செயலாற்ற வேண்டும்.

    இதுபோன்ற இணையவழி குற்றங்களை தடுக்க அரசு சைபர் கிரைம் என்ற்ர பிரிவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. எனினும் குற்றச்செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

    இந்த சூழலில் சேலத்தில் வேலை தருவதாக எஸ்.எம்.எஸ்.அனுப்பி மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

    சேலம் மணியனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி திவ்யா (வயது 36). இவரது செல்போனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த குறுந்தகவலை பார்த்து, அதில் வேலை கேட்டு மெயில் அனுப்பி உள்ளார்.

    அதை தொடர்ந்து இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், சில நிபந்தனைகளை பணம் செலுத்தி செய்தால், பகுதி நேர வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய திவ்யா, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 74 ஆயிரம் செலுத்தி அதன் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி எந்த ஒரு வேலையும் கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பாலாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வீரமணிகண்டன் (வயது 28). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை பார்த்து பகுதி நேர வேலைக்கு தொடர்பு கொண்டு உள்ளார். இவரும் அதே பாணியில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் பேச்சைக் கேட்டு ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளார்.

    ஆனால் இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீர மணிகண்டன், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×