search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 ஆண்டுகளாக நடக்கும் முள்ளுவாடி ரெயில்வே கேட் மேம்பால பணி
    X

    சேலம் அணை மேடு மேம்பாலம் பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.

    8 ஆண்டுகளாக நடக்கும் முள்ளுவாடி ரெயில்வே கேட் மேம்பால பணி

    • சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
    • 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது.

    சேலம் மாநகரில் 5 ரோட்டில் ஈரடுக்கு மேம்பாலம், நான்கு ரோட்டில் மேம்பாலம், லீ பஜார் மேம்பாலம், ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் மேம்பாலம், புதிய பஸ் நிலையத்தில் இருந்து குரங்கு சாவடி, குரங்கு சாவடியில் இருந்து அண்ணா பூங்கா வரை, சேலம் பெங்களூர் பைபாஸில் இரும்பாலை பிரிவு ரோடு, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலை, ஏ. வி.ஆர்.ரவுண்டானாவில் மேம்பாலம் என மாநகரில் எங்கு பார்த்தாலும் மேம்பாலங்களாக காட்சி அளிக்கிறது.

    மேம்பால நகரம்

    மாம்பழ நகரான சேலம் தற்போது மேம்பால நகராகவும் காட்சியளிக்கிறது. இந்த பாலப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்கு முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் நிம்மதியாக சென்று வருகின்றனர்.

    ஆனால் இதற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்ட முள்ளுவாடி கேட் ரெயில்வே மேம்பாலம் தான் தற்போது வரை பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    முள்ளுவாடி ரெயில்வே கேட்

    சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது.

    இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

    குறிப்பாக அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி ,ஏற்காடு, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி ,காரிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகம் அரசு ஆஸ்பத்திரி, கடைவீதி பழைய பஸ் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் வரும் வாகனங்களும் முள்ளுவாடி ரெயில்வே கேட்டை கடந்து பழைய பஸ் நிலையம் செல்கின்றன.

    இதே போல அஸ்தம்பட்டி ஏற்காடு, கன்னங்குறிச்சி, வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் செல்லும் பஸ்களும் தனியார் வாகனங்களும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து முள்ளுவாடி கேட்டை கடந்து தான் செல்கின்றன. போக்குவரத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த முள்ளுவாடி கேட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும்.

    ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று செல்லும் நிலை தினமும் பலமுறை ஏற்படும். வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேம்பாலம்

    கட்டும் பணி தொடக்கம்

    இதை அடுத்து முள்ளுவாடி கேட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து அதற்கான பணிகள் ரூ.83 கோடி திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

    இந்த பாலம் மூன்று ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரச்சனை களால் பாலம் கட்டும் பணி மிகவும் தாமதமானது.

    தாமதம்

    3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது. தற்போது மத்திய கூட்டுறவு வங்கி அருகே பில்லர்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    அந்த பணிகள் நிறைவடைந்து சிலாப் பொருத்தும் பணிகள் இன்னும் ஆறு மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் முள்ளுவாடி கேட் மேம்பாலம் இன்னும் பயன்பாட்டிற்கு வர 8 மாதங்கள் வரை ஆகும் என தெரிகிறது.

    இந்த பாலப்பணி கட்டுமான தாமதத்தால் ஒவ்வொரு நாளும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் தினமும் தவிக்கும் வாகன பிரச்சினை சொல்லி மாளாத வகையில் உள்ளது.

    அணை மேடு பாலம்

    இதேபோல சேலத்திலிருந்து அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சென்னை, பெரம்பலூர், அரியலூர், என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அணை மேடு ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்வே கேட்டும் மூடப்பட்டால் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் பொன்னம்மாப்பேட்டை ரெயில்வே கேட் மூடப்படும் போது மீண்டும் போக்குவரத்து சீராக ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் .

    குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் ஆறு மணி வரையும் இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் அனைமேடு ரெயில்வே கேட் மற்றும் பொன்னமாபேட்டை ரெயில்வே கேட்டை கடக்க வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதனை தீர்க்கும் வகையில் அணைமேடு மேம்பாலம் அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இதற்காக ரூ.92.4 கோடி திட்ட மதிப்பிடும் தயாரிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

    நீண்ட நாள் எதிர்பார்பு

    ஆனாலும் 3 ஆண்டுகளாகியும் இன்னும் 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை. ஆனால் நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் மூடப்படும் போது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    எனவே இந்த ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×