search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லணை கால்வாயில் மூழ்கி அடித்து செல்லப்பட்ட சேலம் வாலிபர்கள்- ஒருவர் உயிருடன் மீட்பு
    X
    ஆற்றில் தத்தளித்த தினேஷ்குமார் உயிருடன் மீட்கப்பட்டதையும், அடித்து செல்லப்பட்ட தாமரைசெல்வனை தீயணைப்பு துறையினர் தேடுவதையும் படத்தில் காணலாம்.

    கல்லணை கால்வாயில் மூழ்கி அடித்து செல்லப்பட்ட சேலம் வாலிபர்கள்- ஒருவர் உயிருடன் மீட்பு

    • மாணவர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் வந்தனர்
    • 2 பேர் மட்டும் பெரிய கோவில் முன்பு உள்ள படித்துறையில் இறங்கி கல்லணை கால்வாயில் குளித்தனர்

    தஞ்சாவூர்:

    திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தின் 26-வது மாநில மாநாடு இன்று தொடங்கி வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஜலகண்டபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 18), தாமரைச்செல்வன் (18) உள்பட 60 பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டனர். அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி அந்த பஸ் இன்று காலை தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தது. பின்னர் அவர்கள் குளித்துவிட்டு பெரிய கோயிலை சுற்றி பார்த்து அதன் பிறகு திருவாரூர் மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    இதையடுத்து தினேஷ்குமார், தாமரைச்செல்வன் ஆகிய 2 பேர் மட்டும் பெரிய கோவில் முன்பு உள்ள படித்துறையில் இறங்கி கல்லணை கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் அருகே உள்ள குளியல் அறையில் குளித்தனர்.

    அப்போது தினேஷ்குமார், தாமரைசெல்வன் இருவரும் ஆற்றில் குளித்தபோது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் இரண்டு பேரும் ஆற்றின் சுழலில் சிக்கி தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபய குரல் எழுப்பினர் . இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையம் மற்றும் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பொய்யாமொழி மற்றும் வீரர்கள்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இதற்கிடையே தினேஷ்குமார் ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரக்கிளையை பிடித்தவாறு இருந்தார். அங்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்ற தீயணைப்பு துறையினர் தினேஷ் குமாரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் தண்ணீரில் மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தாமரைச்செல்வன் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தாமரைச்செல்வனை தேடி வருகின்றனர்.

    இது குறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×