என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை அண்ணாமலை- சசிகலா கருத்து
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியிருப்பது துரதிஷ்டவசமானது.
- இனி யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதா செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது.
சென்னை:
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியிருப்பது துரதிஷ்டவசமானது. அண்ணாமலைக்கு, ஜெயலலிதாவின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகள் எதுவும் தெரியவில்லை.
ஜெயலலிதாவை 6 முறை முதலமைச்சராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை. இனி யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதா செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது.
இதை பற்றியெல்லாம் எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுகளுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன். அதேசமயம் அம்மா உணவகம் தந்து ஏழை-எளிய சாமானிய மக்களின் பசியை போக்கி அன்னலட்சுமியாக விளங்கிய ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது.
இதுபோன்ற கருத்துகளால் தி.மு.க.வினர் வேண்டுமென்றால் மகிழ்ச்சியடையலாம். எனவே பொறுப்பற்றவர்கள் பேசும் இதுபோன்ற பயனற்ற பேச்சுக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, மக்கள் அளித்த தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்பதை மனதில் வைத்து மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம். ஒருங்கிணைந்த அ.தி.மு.க. உருவாக்கி தமிழக மக்களை காத்திடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






