search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது
    X

    பண்ருட்டி அருகே தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது

    • ராமு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கொலையை மறைக்க பஞ்சாயத்து தலைவி கணவரை சிக்க வைத்தது அம்பலம்

    பண்ருட்டி, ஆக.14-

    பண்ருட்டி அருகே தந்தையை மகனே கட்டையால் அடித்து கொன்றுவிட்டு பஞ்சாயத்து தலைவி கணவரை சிக்க வைத்து நாடகமாடியது தெரியவந்தது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் சென்னை சாலையை சேர்ந்தவர் கவர்னர் என்ற ராமு (வயது 69). இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன்,மகாலிங்கம் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். புருஷோத்தமன் தனது மனைவியுடன் ராமு வீட்டில் வசித்து வருகிறார். புருஷோத்தமன் தி.மு.க ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார். பிரபாகரன், மகாலிங்கம், அருகருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ராமு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையிலான போலீசார் கொலையாலிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். எல்.என்.புரம் பஞ்சாயத்து தலைவி கணவர் அ.தி.மு.கவில் உள்ளார். ராமு இறந்து கிடந்த போது அவரது உடலின் மீது அ.தி.மு.க கட்சியின் துண்டு கிடந்ததின் அடிப்படையிலும், கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்ப நாய் பக்கத்து தெருவில் உள்ள பஞ்சாயத்து தலைவியின் வீட்டிற்கு சென்றதால் முதற்கட்ட விசாரணையாக பஞ்சாயத்து தலைவியின் கணவரை விசாரிக்க முடிவு செய்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவர் யார் யாருடன் பேசி வந்தார் என அவருடைய செல்போனை ஆய்வு செய்தனர்.பின்னர் கொலையான ராமுவிற்கும் இவருக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை போலீசார் பஞ்சாயத்து தலைவி கணவரிடம் கேட்ட நிலையில் கொலைக்கும் அவருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது.

    அடுத்தகட்டமாக போலீசார் ராமுவின் மகன்கள், மருமகள்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ராமு மகன்கள், மருமகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில் புருஷோத்தமன் தனது தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் புருஷோத்தமனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அவர் போலீசாரின் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கும் எனது தந்தை ராமுவிற்கும் கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்தது. இந்த பிரச்சினை காரணமாக ஆத்திரத்தில் இருந்த நான் சம்பவத்தன்று வீட்டின் முன் படுத்து தூங்கி கொண்டிருந்த எனது தந்தையை வாயை துணியால் அமுக்கி கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் போட்டுவிட்டேன். இந்த கொலையில் என் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் எனது தந்தை உடலின் மீது அ.தி.மு.க கட்சி துண்டை போட்டுவிட்டு பக்கத்து தெருவில் உள்ள பஞ்சாயத்து தலைவி கணவர் வீட்டிற்கு போய்விட்டு பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டேன். நான் நினைத்தபடி போலீஸ் மோப்ப நாய் எனது தந்தை இறந்து கிடந்த இடத்தில் இருந்து பஞ்சாயத்து தலைவி கணவர் வீட்டிற்கு சென்றது. மேலும் நான் செய்த இந்த நாடகத்தால் அவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இந்த கொலையிலிருந்து நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் போலீசார் இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டனர் இவ்வாறு அவர் கூறினார். தந்தையை மகனே கொலை செய்து விட்டு பழியை பஞ்சாயத்து தலைவி கணவர் மீது போடுவதற்கு நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×