search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை பெரிய கோவிலில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் அமைக்க நடவடிக்கை- கலெக்டர் பேட்டி
    X

    தஞ்சை பெரிய கோவில் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

    தஞ்சை பெரிய கோவிலில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் அமைக்க நடவடிக்கை- கலெக்டர் பேட்டி

    • மீண்டும் மஞ்சப்பை , துணிபைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • சிறிய கடைகளுக்கு ரூ.1000 அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி நெகிழி இல்லா பகுதி என அறிவித்தார்.

    அதோடு மாணவ -மாணவிகளுக்கு சாக்குகள் வழங்கி அதில் பெரிய கோவில் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தால் அதனை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை , துணிபைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது துணி பைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவ- மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கப்பட்டது. தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் தொடங்கி வைக்கப்பட்டது.

    அதுபோல் தஞ்சை பெரிய கோவிலிலும் உரிய அனுமதி பெற்று மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு ரூ.25000, துணிக்கடை போன்ற கடைகளுக்கு ரூ.10000 , சிறிய கடைகளுக்கு ரூ.1000 அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும்.

    மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் . பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×