search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவனுக்கு பாலியல் தொல்லை- கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
    X

    கைதான ஆசிரியர்


    மாணவனுக்கு பாலியல் தொல்லை- கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்

    • ஆசிரியர் ஒருவரின் மகன் திருமண விழா கடந்த 1-ந் தேதி நடந்தது.
    • ஆசிரியர் உசேனை பிடித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 15 வயது மாணவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மகன் திருமண விழா கடந்த 1-ந் தேதி நடந்தது. இந்த திருமணத்திற்கு அந்த மாணவன் இரவில் சென்று உள்ளான்.

    அப்போது அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள உசேன் (வயது 42) என்பவர் திருமண மண்டபத்தில் உள்ள கழிப்பறையில் வைத்து அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தான். அவர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், யாரிடமும் நடந்த சம்பவம் குறித்து கூற வேண்டாம் எனவும் கூறியதாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த மாணவன் தனது பெற்றோரிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தான். அவர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர்.

    இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவனை சக மாணவர்கள் சிலர் கேலி,கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட மாணவன் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மாணவனை காப்பாற்றினர். இதனால் பள்ளி முன்பு அப்பகுதி பொதுமக்கள் நேற்று திரண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று ஆசிரியர் உசேனை பிடித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இரவு ஆசிரியர் உசேன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் மாணவன் மற்றும் ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    இதனிடையே கைதான ஆசிரியர் உசேனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறும் போது, 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி இது போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    கிருஷ்ணகிரி அருகே மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×