என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாறை ஓவியங்களை பார்வையிட்டு அதன் விளக்கங்களை மாணவிகளுக்கு அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் அளித்தார்.
பாறை ஓவியங்களை மாணவிகள் ஆய்வு
- முனீஸ்வரன் கோவில் பாறையின் குகை போன்ற பகுதியில் உள்ள பாறை ஓவியத் தொகுதியும் மாணவிகளுக்கு காட்டப்பட்டது.
- 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூட அந்த நீர்த்தேக்க பகுதி அங்கு இருந்திருக்கக்கூடும் என்பதையே இந்த பாறை ஓவியம் விளக்குகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கடந்த 12-ந் தேதி முதல் வருகிற 26-ந் தேதி வரை, 15 நாட்கள் கல்லூரி மாணவிக்கான அருங்காட்சியகவியல் மற்றும் தொல்லியல் உள்விளக்க பயிற்சி முகாம் நடந்து வருகின்றன.
இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மற்றும் ஊத்தங்கரை அதியமான் கல்லூரிகளில், முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவிகள், 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரியின் வரலாற்று சிறப்புமிக்க பாறை ஓவியங்களைக் கொண்ட தாளாப்பள்ளி மலைப்பகுதிக்கு சென்றனர்.
அங்கு ஏரிக்கரை அருகே உள்ள அமாவாசை குண்டு என்ற பாறையில் உள்ள 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெண்சாந்து பாறை ஓவியங்கள் பற்றி மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்பு அந்த மலையின் மற்றொரு பகுதியில் உள்ள இருட்டு கவி என்ற இடத்தில் இருக்கும் பாறை ஓவியங்களை பார்வையிட்டு அதன் விளக்கங்களை அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் அளித்தார்.
அதன் அருகே அனுமன் கோவில் பின்புறம் உள்ள பாறை ஓவியங்கள், அதற்கு அருகே உங்ள முனீஸ்வரன் கோவில் பாறையின் குகை போன்ற பகுதியில் உள்ள பாறை ஓவியத் தொகுதியும் மாணவிகளுக்கு காட்டப்பட்டது.
இந்த பாறை தொகுதியில் தான், படகு போன்ற அமைப்பு உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூட அந்த நீர்த்தேக்க பகுதி அங்கு இருந்திருக்கக்கூடும் என்பதையே இந்த பாறை ஓவியம் விளக்குகிறது.
அந்த குகையின் மற்றொரு பகுதியில் பாண்டில் விளக்குகளும், மற்றொரு பகுதியில் இரண்டு வீடுகளும், தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட மூன்று பெண்களுடைய பாறை ஓவியமும் காணப்படுகிறது.
இவை அனைத்துமே 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






