search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு சரகத்தில் ஒரு மாதத்தில் 23 டன் ரேஷன் அரிசியை கடத்திய 83 பேர் கைது
    X

    ஈரோடு சரகத்தில் ஒரு மாதத்தில் 23 டன் ரேஷன் அரிசியை கடத்திய 83 பேர் கைது

    • கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் வன்னியப்பெருமாளின் உத்தரவின்பேரில், கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மற்றும் ஈரோடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    அதன்படி ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய 83 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 23 டன் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் 10-ம், 3 சக்கர வாகனம் ஒன்றும், 4 சக்கர வாகனங்கள் 6-ம் என மொத்தம் 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் அரசு மானியத்தால் வழங்கப்பட்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாத 10 பேர் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட தமிழகம்-கர்நாடகா மாநில எல்லையான தாளவாடி, ஆசனூர், பர்கூர், கடம்பூர் மற்றும் தமிழக-கேரளா மாநில எல்லை பகுதியான உடுமலைப்பேட்டை அமராவதி நகர் ஆகிய சோதனை சாவடிகளிலும் இரவு, பகலாக போலீசார் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறார்கள்.

    மாதம் தோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×