search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் குண்டுவெடிப்பு பற்றி எந்த பதிவும் செய்யவில்லை-  நடிகை காயத்ரி ரகுராம்
    X

    டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் குண்டுவெடிப்பு பற்றி எந்த பதிவும் செய்யவில்லை- நடிகை காயத்ரி ரகுராம்

    • இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் வேலைக்கு செல்கின்றனர்.
    • வெளிநாடு செல்பவர்களில் பலர் போலி விசாவை பெற்று சென்று அங்கு தவறான கும்பலிடம் மாட்டி கொள்கின்றனர்.

    கோவை:

    பா.ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    பா.ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் வேலைக்கு செல்கின்றனர். இப்படி செல்பவர்களில் பலர் போலி விசாவை பெற்று சென்று அங்கு தவறான கும்பலிடம் மாட்டி கொள்கின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இதுபோன்று சிக்கி கொண்ட இந்தியர்களை மத்திய அரசு மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு தீவிர சட்டங்களை இயற்ற வேண்டும்.

    நான் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தமிழ் மொழி குறித்து அங்குள்ள மக்களிடம் கூறி வருகிறேன். அப்படி ஒரு முறை பிலிப்பைன்ஸ் சென்றபோது, அங்கு தமிழைப் போற்றும் திருவள்ளுவர் சிலைகள் அதிகமாக இருந்தது. எனவே தமிழகத்திலும் வெளிநாடுகளைப் போல திருவள்ளுவர் சிலைகளை அதிக அளவில் சிலை வடிவமைப்பாளர்கள் செய்து விற்பனை செய்ய வேண்டும்.

    திராவிட இயக்கத்தினர் எப்போதும் தமிழை வளர்க்கவில்லை. மாறாக அவர்கள் ஆங்கிலத்தையே வளர்த்தனர். தமிழை வளர்க்க விடாமல் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஆங்கில பள்ளிக்கூடங்களே அதிகளவில் உள்ளது. எனவே தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தி எங்கும், யாரிடமும் திணிக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டி முடிந்ததும், நிருபர்கள், டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் 1998-ம் ஆண்டு போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது போல பதிவு செய்துள்ளீர்களே என காயத்ரி ரகுராமிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர், அதுபோன்ற பதட்டமான நிலையை உருவாக்க நான் எந்தப் பதிவும் போடவில்லை. இந்த கேள்வி கேட்டு நீங்கள் தான் பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள் என தெரிவித்தார். இதனால் நிருபர்களுக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பா.ஜ.க.வினர் நிருபர்களை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×