search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.27 லட்சம் கேட்பதாக பெண் மீது விவசாயி கந்து வட்டி புகார்
    X

    ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.27 லட்சம் கேட்பதாக பெண் மீது விவசாயி கந்து வட்டி புகார்

    • திருப்பூர் மாநகரம், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்கு, போலீஸ் நிலையங்களுக்கு கடன் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் முழுமையாக விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
    • ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.27 லட்சம் கேட்பதாக பெண் மீது விவசாயி ஒருவர் கந்துவட்டி புகார் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    கடலூர் புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை போலீஸ்காரர் செல்வக்குமார் தற்கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

    இதற்காக ஆபரேஷன் கந்து வட்டி என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உள்ள போலீஸ் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும், உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    இதையடுத்து திருப்பூர் மாநகரம், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்கு, போலீஸ் நிலையங்களுக்கு கடன் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் முழுமையாக விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.27 லட்சம் கேட்பதாக பெண் மீது விவசாயி ஒருவர் கந்துவட்டி புகார் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் முதலிபாளையம் அருகே கெங்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மொரட்டு பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நில ஆவணங்கள், வெற்று காசோலை ஆகியவற்றை அடமானமாக வைத்து ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். 3 சதவீதம் வட்டியுடன் மாதம் ரூ.15 ஆயிரம் செலுத்தி வந்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக கிருஷ்ணமூர்த்தி பணம் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி, அந்த பெண்ணிடம் சென்று மீதி பணத்தை மொத்தமாக செலுத்தி ஆவணங்களை மீட்க சென்றுள்ளார்.

    அப்போது ரூ.27 லட்சம் இன்னும் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் கந்துவட்டி புகார் அளித்தார். போலீசார் கந்துவட்டி புகார் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×