search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது
    X

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

    • மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
    • விவசாயிகளை போலீசார் தடுத்ததால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    திருச்சி:

    இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசண் சரண்சிங்கிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

    இதற்கிடையே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் 2 மாதங்களாக போராடி வரும் நிலையில் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி பிரதமருக்கு கடிதம் அனுப்ப தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

    அதன்படி மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அதேபோல் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளையும், பெண்களையும் காப்பாற்றுங்கள் என கோஷம் எழுப்பினர்.

    இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு, மாநில துணைத்தலைவர் மேகராஜன், சட்ட ஆலோசகர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் மதிவாணன் உள்பட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியோர் இணைந்து தபால் நிலையம் நோக்கி பேரணியாக வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×