search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்- முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் முகாம்
    X

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்- முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் முகாம்

    • மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரவு, பகலாக மேடை அலங்காரம் மற்றும் பந்தல் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • மைதானத்தில் சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன.

    மதுரை:

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் மதுரையில் முகாமிட்டு இறுதி கட்டப்பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரமாண்டமாக அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சமையல் கூடங்கள், உணவு பரிமாறும் இடங்கள், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரவு, பகலாக மேடை அலங்காரம் மற்றும் பந்தல் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் விஜயபாஸ்கர், வளர்மதி, காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ராஜ் சத்யன் உள்ளிட்டோர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். மாநாட்டு மைதானத்தில் இன்று காலை அதிமுக மாநாடு தொடர்பான பிரசார வாகனத்தையும் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு விழா மேடை டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புகைப்பட கண்காட்சி அரங்கும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கின் முகப்பு தோற்றத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செங்கோலுடன் இருப்பது போன்றும், எடப்பாடி பழனிசாமி படங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் புகைப்பட கண்காட்சியில் இதுவரை பார்த்திராத அரிய புகைப்படங்களும் இடம்பெறுகிறது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் முக்கிய திட்டங்கள் மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்களும் நவீன தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த புகைப்பட கண்காட்சி அ.தி.மு.க. தொண்டர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர். மாநாட்டு மேடை மற்றும் பந்தல் மேற்பகுதிகள் அலங்கரிக்கப்பட்டு மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் மைதானத்தில் சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன. இது தவிர பந்தலின் இருபுறங்களிலும் தொண்டர்கள் திரளாக குவிந்து நிகழ்ச்சிகளை காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×