என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரை அ.தி.மு.க. மாநாட்டிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
- மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
- 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர்.
மதுரை:
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம்முதலே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மாநாட்டிற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய தடையில்லா சான்று பெறவில்லை. ஏராளமானோர் மாநாட்டிற்கு வருவர் என கூறப்பட்டுள்ளதால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும். மாநாட்டிற்கு வருவோரால் அதிக அளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதிக்க கூடாது என கூறப்பட்டது.
இதையடுத்து இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி, 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர். கடைசி நேரத்தில் தடை கோரினால் எவ்வாறு முடியும்? மாநாட்டில் எவ்வித வெடிகுண்டுகளும், பட்டாசுகளும் வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதால் மாநாட்டிற்கு தடை விதிக்க முடியாது கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.






