என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியபாளையத்தில் தனியார் தங்கும் விடுதியின் இரும்பு கேட் விழுந்து 10 வயது சிறுவன் பலி
    X

    பெரியபாளையத்தில் தனியார் தங்கும் விடுதியின் இரும்பு கேட் விழுந்து 10 வயது சிறுவன் பலி

    • மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக சிறுவன் பலியானான்.
    • பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ். இவரது குடும்பம் மற்றும் உறவினர்களின் குடும்பம் என மொத்தம் நான்கு குடும்பத்தினர் நேற்று முன்தினம் பெரியபாளையம் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த வந்தனர்.

    இதனால் இவர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்கி இருந்தனர். நேற்று சுவாமி தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இந்நிலையில், நேற்று மாலை இவர்கள் தங்கியிருந்த விடுதியின் காம்பவுண்ட் சுவர் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த விடுதியில் இருந்த காம்பவுண்டின் இரும்பு கேட் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் 5ம் வகுப்பு படித்து வந்த நித்திஷ் (வயது10) என்ற சிறுவன் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.

    இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சிறுவன் நித்திஷ் உயிருக்கு போராடினான். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக சிறுவன் பலியானான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும், பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த தனியார் தங்கும் விடுதி காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விபத்து குறித்து தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

    நேர்த்தி கடனை செலுத்த கோவிலுக்கு வந்த குடும்பத்தினரின் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் பெரியபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×