search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்னை திருடன்னு சொல்லாதீங்க... மோட்டார் சைக்கிள் திருட்டில் கைதானவர் வீடியோவில் கதறல்
    X

    என்னை திருடன்னு சொல்லாதீங்க... மோட்டார் சைக்கிள் திருட்டில் கைதானவர் வீடியோவில் கதறல்

    • கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள டூவீலர் பட்டறைக்கு சென்றபோது, அங்கு பட்டறை உரிமையாளர், வேலுவின் டூவீலரில் கிளச் போன்றவற்றை சரி செய்து கொண்டிருந்தார்.
    • ராஜாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் தனது நண்பரை பார்க்க, நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் வந்தார். கேன்டீன் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு சென்ற அவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, அவரது வண்டியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், எனது வண்டியே மிகவும் பழையது. அதையும் திருடிச்சென்று விட்டார்களா? என்ற வேதனையுடன் வண்டியை தேடினார். சாவி தன்னிடம் இருப்பதால், யாராவது தள்ளிக்கொண்டு தான் சென்றிருக்க வேண்டும் என முடிவு செய்த அவர், நீண்ட தூரம் வண்டியை தள்ளிச் சென்றிருக்க முடியாது என கருதி, தனது நண்பருடன் வண்டியை தேடத் தொடங்கினார்.

    அப்போது, கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள டூவீலர் பட்டறைக்கு சென்றபோது, அங்கு பட்டறை உரிமையாளர், வேலுவின் டூவீலரில் கிளச் போன்றவற்றை சரி செய்து கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த வண்டியை கொண்டு வந்து ரிப்பேர் பார்க்க சொன்னது யார்? என கேட்டார். அப்போது, அங்கிருந்த மற்றொரு நபரை கடை உரிமையாளர் கைகாட்டினார்.

    இதற்கிடையில், அந்த நபர் பட்டறையின் எதிர்பகுதியில் உள்ள கோவிலில் இருந்து, எலுமிச்சை பழத்தை எடுத்து வந்து, திருடி வந்த வண்டிக்கு சிறிய பூஜையும் போட்டிருந்தார். இதுகுறித்து வேலு விசாரித்த போது, அவர் மன்னார்பாளையத்தை சேர்ந்த ராஜா (49) என்றும், அது தன்னுடைய வண்டி எனக் கூறினார்.

    இதனையடுத்து, அவரை நண்பர் உதவியுடன் மடக்கிப் பிடித்த வேலு, டவுன் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவர், 'என்னை திருடன்னு சொல்லாதீர்கள். எனது நண்பன் தான் வண்டியை கொடுத்தான்.

    எனது செல்போனும் அவனிடம் தான் இருக்கிறது. எனது 2 பிள்ளைகள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் திருடல, என்னை திருடன் என சொல்லாதீர்கள்,' என்றார்.

    இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, என்னை திருடன்னு சொல்லாதீர்கள் என்று அவர் கூறும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×