search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே 6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்ற பெயிண்டர் கைது
    X

    சிவகிரி அருகே 6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்ற பெயிண்டர் கைது

    • மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தேன்.
    • டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது அருந்தினேன்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள நவாசாலையில் உள்ள தோட்டத்தில் நேற்று சிறுவன் உடல் மிதந்தது. தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி வழக்குப்பதிவு செய்து சிறுவன் யார்? என்று விசாரணை நடத்தியதில் சிவகிரி அருகே உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவை சேர்ந்த பெயிண்டரான முனியாண்டி(வயது 45) என்பவரின் மகன் மகிழன்(6) என்பதும், பெற்ற மகன் என்றும் கூட பாராமல் முனியாண்டி சிறுவனை கிணற்றில் வீசி கொலை செய்ததும் தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது முனியாண்டி கூறியதாவது:-

    எனது மனைவி கார்த்தீஸ்வரி(40). எனக்கு 2 மகன்கள். அதில் 2-வது மகன் மகிழன் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் எனது மனைவி குறித்து அவதூறாக பேசினார்.

    அந்த நாளில் இருந்தே அந்த நபர் பேசியதை நினைத்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அதனால் எனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தேன். இதனால் எங்களுக்குள் குடும்ப தகராறு அதிகரித்தது.

    நேற்று முன்தினம் மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது மகன் மகிழன் படிக்கும் பள்ளிக்கு சென்று அவனை அழைத்து சென்றேன். அவனுக்கு சாப்பாடு, குளிர்பானம், புதிய ஆடை வாங்கி கொடுத்தேன்.

    பின்னர் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது அருந்தினேன். அப்போது மது போதையில் எனது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×