search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்- புகழேந்தி
    X

    கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்- புகழேந்தி

    • பால் விலை உயர்வுக்கு ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • பால் விலையை குறைக்காவிட்டால் ஓ.பி.எஸ்-ன் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு எவரும் வர முடியாது. இருக்கவும் முடியாது. தங்கமணியும் வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியை இயக்குவதில் பின்புலமாக உள்ளனர். தங்கமணிக்கு முதல்-அமைச்சராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் அவரது விருப்பு வெறுப்பு காரணமாக 4 தொகுதிகளை அ.தி.மு.க. இழந்தது.

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இரட்டை இலை சின்னம் இல்லாமல் தங்கமணி தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா? ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி தருவதாக தங்கமணி பேசியுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இல்லாத அதிகாரமா? இவர்கள் யார் மந்திரி பதவி தருவதற்கு? இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க.வினர் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டு அ.தி.மு.க.வை வலுப்படுத்த ஓ.பி.எஸ். தயாராக உள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கூடிய விரைவில் பா.ஜ.க.வில் சேர தயாராக உள்ளனர்.

    பால் விலை உயர்வுக்கு ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார். பால் விலையை குறைக்காவிட்டால் ஓ.பி.எஸ்-ன் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தி.மு.க அரசு ஏன் கால தாமதம் செய்கிறது என்று தெரியவில்லை. துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

    தற்போது சொத்து வரி உள்பட விலைவாசி ஏறியுள்ளது. மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். சொத்து வரியை குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு 954 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது அவர் இனி சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறினார். ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், எம்.எல்.ஏக்களும் முறைகேடு செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஓ.பி.எஸ் அணி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×