என் மலர்
உள்ளூர் செய்திகள்
வரலாற்றில் முதன்முறையாக பழனி கோவில் உண்டியல் வருவாயாக ரூ.7.17 கோடி தங்கம், வெள்ளி நகைகளும் கிடைத்தன
- கடந்த 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல்நாள் காணிக்கைமூலம் ரூ.2கோடியை 44 லட்சத்து 23ஆயிரத்து 479 வருவாயாக கிடைத்தது.
- 2-வது நாளாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.2கோடியே 65 லட்சத்து 57 ஆயிரம் கிடைத்தது.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து தைப்பூச திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மண்டலபூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அலகு குத்தியும், முடிகாணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
மேலும் கோவில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளிபொருட்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
தைப்பூசதிருவிழா நிறைவடைந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணைஆணையர் நடராஜன் தலைமையில் துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல்நாள் காணிக்கைமூலம் ரூ.2கோடியை 44 லட்சத்து 23ஆயிரத்து 479 வருவாயாக கிடைத்தது. 2-வது நாளாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.2கோடியே 65 லட்சத்து 57 ஆயிரம் கிடைத்தது.
3-ம் நாளாக நேற்று இரவு 10மணிவரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 3 நாட்கள் உண்டியல் வருவாயாக ரூ.7கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 126 கிடைத்துள்ளது. தங்கம் ஒருகிலோ 248கிராம், வெள்ளி 48கிலோ 377கிராம் ஆகியவை கிடைத்தது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 2529 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
பக்தர்கள் காணிக்கையாக தங்கம், வெள்ளியாலான வேல், மயில், திருமாங்கல்யம், காவடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
பழனி முருகன் கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 2 வருடமாக திருவிழா குறிப்பிட்ட அளவு பக்தர்களுடன் மட்டுமே நடந்தது. கடந்த வருடமும் குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர். இந்த வருடம் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் உண்டியல் வருவாய் ரூ.7 கோடிக்குமேல் கிடைத்துள்ளது. பழனி கோவில் உண்டியல் வருவாயில் இதுவரை கிடைத்த அதிக வருவாயாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.