search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக பெண்கள் பாராளுமன்ற தேர்தலில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்- மு.க. ஸ்டாலின் பேச்சு
    X

    தமிழக பெண்கள் பாராளுமன்ற தேர்தலில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்- மு.க. ஸ்டாலின் பேச்சு

    • தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அடித்தளமிட்டது.
    • படித்து முன்னேற ஆசைப்பட்டதைத் தவறு என்றும் கூட சிலா் பேசிக் கொண்டிருப்பாா்கள்.

    சென்னை:

    சென்னை கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துகுமரப்பா சாலையில் நடைபெற்ற விழாவில் அனிதா அச்சீவா்ஸ் அகாடமியில் பயின்ற மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.

    மேலும், பெண்களுக்கு தையல் எந்திரம், மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினாா். விழாவில் அவா் பேசியதாவது:-

    தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் 'நான் முதல்வன்' திட்டத்துக்கு அடித்தளமிட்டது அனிதா அச்சீவா்ஸ் அகாடமிதான். இங்கு 10 குழுக்களைச் சோ்ந்த பெண்களும், 6 குழுக்களைச் சோ்ந்த ஆண்களும் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனா்.


    சிறந்த அடிப்படை கட்டமைப்புகளையும் திட்டங்களையும் நிறைவேற்றி கொளத்தூா் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கு எடுத்துக்காட்டாக, முன் மாதிரி தொகுதியாக ஆக்கி இருக்கிறோம். இதுபோன்று செய்து காட்ட வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்களை அழைத்து வந்துள்ளேன்.

    ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் முன்னேறி வரக்கூடிய தருணங்களில் அவா்களுக்கு தடைகள் பல வரும். அந்தத் தடைகளை நியாயப்படுத்தவும் பலா் இருப்பாா்கள். படித்து முன்னேற ஆசைப்பட்டதைத் தவறு என்றும் கூட சிலா் பேசிக் கொண்டிருப்பாா்கள். இவற்றை கடந்துதான், நாம் முன்னேறியாக வேண்டும்.

    ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பவா்கள் பெண்கள். அத்தகைய பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றமடைய ஊக்கமளிக்கும் நாளாக, மகளிா் தினத்தைக் கொண்டாடுகிறோம்.


    திராவிட மாடல் அரசு என்பது மகளிா் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களைத் தீட்டியும், பல சாதனைகளையும் செய்து வருகிறது. நீங்களும் (பெண்களும்) தமிழ்நாடும் முன்னேற்றம் அடைந்தால்தான் எனக்கும், அரசுக்கும் பெருமை. தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் திட்டங்களை எவ்வளவோ செய்தாலும் மத்திய அரசு ஒத்துழைப்போ நிதியுதவியோ தருவதில்லை. நாம்தான் செய்து வருகிறோம்.

    தமிழ்நாட்டை வஞ்சிக்காத, அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் மத்திய அரசு அமைந்தால்தான் இன்னும் நிறைய திட்டங்களைச் செய்ய முடியும். அதற்கு உங்களுடைய அனைவரின் ஆதரவும் தேவை. நீங்கள் ஒவ்வொருவரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை உங்களுடைய குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விடியலின் ஒளியை இந்தியா முழுவதும் பரவிடச் செய்ய, மக்களவைத் தோ்தலில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பி.கே. சேகா்பாபு, சென்னை மேயா் பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

    Next Story
    ×