என் மலர்
உள்ளூர் செய்திகள்
திம்பம் மலைப்பகுதி 8-வது கொண்டை ஊசி வளைவில் தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்தது
- தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது.
- திம்பம் மலைப்பகுதியில் 16 டன் அளவு கொண்ட வாகன மட்டுமே அனுமதித்து வந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மிகவும் ஆபத்தான மலைப்பகுதி ஆகும்.
தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.
இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனால் திம்பம் மலைப்பகுதியில் 16 டன் அளவு கொண்ட வாகன மட்டுமே அனுமதித்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
திம்பம் மலைப்பகுதி 8-வது கொண்டை ஊசி வளைவில் தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் தன்ராஜ் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
வாகனம் கொண்டை ஊசி வளைவிலேயே கவிழ்ந்து விழுந்ததால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடர்ந்த வனப்பகுதியில் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
பிறகு பண்ணாரி சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் தக்காளி பாரத்தை வேறு வண்டிக்கு மாற்றம் செய்து கவிழ்ந்து கிடந்த வேனை ஜே.சி.பி. மூலம் அப்புறப் படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர்.
இதனால் 6 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. சரக்கு வேனில் 4 டன் அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததால் கொண்டை ஊசி வளைவில் வாகனம் நிலை தடு மாறி கவிழ்ந்தது தெரிய வந்தது. எனவே சிறிய ரக வாகனங்களுக்கும் பாரம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.