என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆளுநரை பதவியில் இருந்து மத்திய அரசு நீக்க வேண்டும்- வைகோ
- சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மிக பண்பாக நடந்து கொண்டார்.
- ஆளுநர் நாட்டுப்பண் முடிவதற்கு முன்பே அவையிலிருந்து வெளியேறினார்.
நெல்லை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லை ரெட்டியார்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காத அநீதியை ஆளுநர் மாளிகை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆளுநர் சட்டமன்றத்தில் நடந்துகொண்ட முறை இதுவரை எந்த மாநிலத்திலும் எந்த ஆளுநரும் நடத்தாத ஒன்று. ஆளுநர் அநாகரீகமான செயலில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை உடனே வெளியேற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசின் கொள்கைகள், சாதனைகளை மக்களுக்கு அறிவிக்கும் உரை தான் ஆளுநர் உரை. அப்படிப்பட்ட உரையை வாசிக்காமல் அவராகவே சிலவற்றை சேர்த்து வாசித்து விட்டு அந்த உரைக்கு ஏற்கனவே மறுப்பு தெரிவித்ததாக அபண்டமான பொய்யை ஆளுநர் வட்டாரம் சொல்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட வேண்டும். ஆளுநர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் மத்திய அரசும் ஆளுநரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருக்கிறது என்று அர்த்தம்.
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 212-ன் படி சட்டமன்ற நடவடிக்கையில் நீதிமன்றமே தலைமுடியாது என நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஆனால் ஆளுநர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த 21 மசோதாக்களில் கையெழுத்து போடாமல் உள்ளார்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வேண்டுமென்று பலர் கூறுகின்றனர். 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நேற்று கூட நெல்லை பணகுடியில் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்துள்ளார். ஆனால் அதை தடை செய்யும் மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாமல் ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுக்கிறார்.
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மிக பண்பாக நடந்து கொண்டார். ஆனால் அதை மதிக்காமல் ஆளுநர் நாட்டுப்பண் முடிவதற்கு முன்பே அவையிலிருந்து வெளியேறினார். ஆர். எஸ். எஸ். சங்பரிவாரின் கருவியாக ஆளுநர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அண்ணா பிறந்தநாளில் சேது சமுத்திரம் திட்டத்தை அறிவிக்க வைத்தேன். அதன் பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்று இத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வருகிறார்கள் என்றால் அதைவிட தித்திப்பான செய்தி எதுவும் இல்லை. எனவே முதல்-அமைச்சரை மனதார பாராட்டுகிறேன்.
தமிழக பிரதிநிதிகள் ஆளுநரை மாற்ற கோரி குடியரசுத் தலைவரை சந்தித்திருப்பதால் நியாயம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆளுநரை மத்திய அரசு இயக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நியாயம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






