search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே காட்டு யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி
    X

    கோவை அருகே காட்டு யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி

    • கோவையில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • மாணவர் இறந்த தகவல் ராஜஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு, உறவினர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.

    கோவை:

    ராஜஸ்தான் மாநிலம் சவாய்மடபூரை சேர்ந்தவர் கமல்ஸ்ரீமல். இவரது மகன் விஷால் ஸ்ரீமல் (வயது 23).

    இவர் ராஜஸ்தானில் உள்ள கோட்டா ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் வனவியல் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விஷால் ஸ்ரீமல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது ஆராய்ச்சி படிப்புக்காக கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு வந்தார்.

    அவர் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி, விஞ்ஞானியான ரித்திகா கலை என்பவரிடம் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு விஷால் ஸ்ரீமல் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றார். பின்னர் அங்குள்ள உணவு கூடத்தில் இருந்து பாட்டிலில் தண்ணீரை நிரப்பி கொண்டு அறைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அங்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் விஷால் ஸ்ரீமல் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக விஷால் ஸ்ரீமல் யானையிடம் சிக்கிக் கொண்டார்.

    யானை அவரை தூக்கி வீசியதுடன், காலால் மிதித்தது. இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர்.

    பின்னர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஷால் ஸ்ரீமலை மீட்டு சிகிச்சைக்காக கேரள மாநிலம் புட்டத்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மாணவர் இறந்த தகவல் ராஜஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு, உறவினர்கள் கோவைக்கு வந்துள்ளனர். அவர்களிடம் உடலை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவையில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×