search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அருகே மகன்-தாய் கொலை: ஆணவ கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
    X

    ஊத்தங்கரை அருகே மகன்-தாய் கொலை: ஆணவ கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

    • போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி தண்டபாணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • மருத்துவமனையில் குணமடைந்த பிறகு தண்டபாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கதவணி ஊராட்சி காரப்பட்டு அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது50). தையல் தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி.

    இவர்களுக்கு பவித்ரா, சுஜி என்ற 2 மகள்களும், சுபாஷ் (25) என்ற மகனும் உள்ளனர். இதில் சுபாஷ் தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சுபாஷ்க்கும், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசுயா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதனால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் சுபாஷ், அனுசுயாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் மனைவியை தனியாக தங்க வைத்து விட்டு சுபாஷ் தனது பாட்டி வீட்டுக்கு வந்தார்.

    இந்த நிலையில் அதிகாலை தண்டபாணி காதல் திருமணம் செய்த தனது மகன் சுபாசை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதனை தடுக்க வந்த கண்ணம்மாளுக்கும் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது. இதில் சுபாஷ், அவருடைய பாட்டி கண்ணம்மாள் ஆகியோர் இறந்தனர்.

    ஆனாலும் ஆத்திரம் அடங்காத தண்டபாணி அரிவாளால் மருமகள் அனுசுயாவையும் வெட்டினார்.

    இதில் அனுசுயா சாலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். 3 பேரையும் வெட்டிய தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த சுபாஷ், கண்ணம்மாள் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த அனுசுயாவை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக இன்றுகாலை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதையடுத்து கொலையாளியை பிடிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    அப்போது ரத்தக்கறை ஆடையுடன் தண்டபாணி ஊத்தங்கரை அருகேயுள்ள அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளார்.

    அங்கு துக்கம் தாங்காமல் தண்டபாணி தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஊத்தங்கரை நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தனிப்படை போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய குற்றவாளி தண்டபாணியை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி தண்டபாணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் குணமடைந்த பிறகு தண்டபாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×